வருகிற 28 ஆம் தேதி கூடுவதாக இருந்த இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் பங்கேற்க இயலாததை அடுத்துக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று குழுவின் ஒருங்கிணைப்பாளரும் மத்திய அயலுறவு அமைச்சருமான பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் அடுத்த மாதம் முதல் பாதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அவசியமான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு நடத்தி முடித்துள்ள பேச்சுக்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகுதான் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் சர்வதேச அணுசக்தி முகமையுடன் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பை இந்தியா இழக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இதனால் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்.
முன்னதாக இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செத்துவிட்டது என்று இடதுசாரிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.