வீடுகளுக்குப் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான வைப்புத் தொகையை ரூ.400 முதல் ரூ.1250 வரை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
சிலிண்டர் தயாரிப்பதற்கான உருக்கு விலை உயர்ந்து விட்டதால், புதிய எரிவாயு இணைப்புகளுக்கு வசூலிக்கப்படும் திருப்பி அளிக்கப்படக் கூடிய வைப்புத் தொகையை ரூ.850 இல் இருந்து ரூ.1250 ஆக இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.500 இல் இருந்து ரூ.900 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "எரிவாயு சிலிண்டரின் தயாரிப்புச் செலவை ஒப்பிடும்போது தற்போது வசூலிக்கப்படும் வைப்புத் தொகை கட்டுப்படி ஆகாது. உருக்கு விலை உயர்ந்து விட்டதால் பெருமளவு இழப்பு ஏற்படுகிறது" என்றார்.
இதேபோல எரிவாயு இணைப்புடன் வழங்கப்படும் ரெகுலேட்டரின் விலையும் ரூ.100 இல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.