கர்நாடாக மாநிலப் பா.ஜ.க. சட்டமன்றத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளரான அவர் விரைவில் மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாகூரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பெங்களூரில் நடந்த பா.ஜ.க. உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், அக்கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாகக் கருதப்படும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கூலிஹட்டி சேகர், சிவராஜ் தங்கடி ஆகியோர் இருவரும் பங்கேற்றனர்.
இன்னும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, மொத்தம் 214 இடங்களைக் கொண்ட கர்நாடகச் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் 110 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு சுயேட்சைகளின் ஆதரவைப் பெறுவதற்கு பா.ஜ.க. தீவிரமாக முயற்சித்து வருகிறது.