மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதுமான மக்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டதையே கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.
"மத்திய அரசின் கொள்கைகள், குறிப்பாக விலைவாசி உயர்வு மற்றும் விவசாயத் துறை பற்றிய கொள்கைகள் மக்களிடம் நம்பிக்கையின்மையை உருவாக்கி காங்கிரசை நிராகரிக்குமாறு செய்து விட்டன" என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரகாஷ் காரத், கர்நாடகத் தேர்தல் குறித்து கனசக்தி இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் மதசார்பற்ற சக்திகளின் பலவீனம் பா.ஜ.க. வெற்றிக்குக் காரணமாக அமைந்து விட்டது என்பதைக் குறிப்பிட்ட அவர், மக்களை சாதி ரீதியாக ஒன்றுபடுத்துவதில் பா.ஜ.க. நீண்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
முந்தைய ஆட்சியில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதில் சந்தர்ப்பவாதத்துடன் நடந்துகொண்ட பா.ஜ.க. வை மதசார்பற்ற கட்சிகள் புரிந்து கொண்டு, தற்போது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.