ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவருக்கு எதிராக நடந்துள்ள வன்முறைகளுக்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த இனத்தின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராஜஸ்தானில், தங்களைப் பழங்குடியினர் இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறைகளிலும், அதைக் கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 25 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
இந்நிலையில், பலியானவர்களுக்கு புது டெல்லியில் இரங்கல் கூட்டம் நடத்திய குஜ்ஜார் இனத் தலைவர்கள் மத்திய மாநில அரசுகளின் மீது கடுமையான குற்றச்சாற்றுக்களை முன் வைத்தனர்.
"ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போரிடும் படையினராக குஜ்ஜார் இனத்தவர் தங்கள் தேசப்பற்றைக் காட்டி வருகின்றனர். நாட்டிற்கு அளப்பரிய தியாகங்களைச் செய்து வரும் குஜ்ஜார்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டதற்குப் பரிசாக துப்பாக்கி குண்டுகள் கிடைத்துள்ளன.
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம். இன்னும் பல உயிர்த் தியாகங்களைச் செய்ய நாங்கள் தயராக உள்ளோம்; ஆனால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம்.
குஜ்ஜார் இனத்தவருக்கு எதிராக மாநில அரசின் துணையுடன் நடந்து வரும் வன்முறைகளுக்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் எங்கள் கோரிக்கைகளைக் கவனிக்க மறுப்பதோடு, ராஜஸ்தான் அரசைக் காப்பாற்றி வருகிறார்" இவ்வாறு அவர்கள் குற்றம் சாற்றினர்.
முன்னதாக நேற்று நொய்டாவில் கூடிய ஆயிரக்கணக்கான குஜ்ஜார்கள், ராஜஸ்தான் முதல்வர் பதவிவிலக வேண்டும் என்ற வலியுறுத்தியதோடு, காவல்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மரிபார்ட் ரயில் நிலையம் அருகில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில் குஜ்ஜார்கள் போராட்டத்தினால் ஆக்ரா- ஜெய்ப்பூர் வழித்தடத்தில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.