பெங்களூரூ : கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்கத் தேவையான அருதிப் பெரும்பான்மையைப் பெறுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.
பிற்பகல் 1.30 மணி வரை கிடைத்த நிலவரப்படி பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 6 இடங்களில் முன்னணியில் உள்ளது.
ஆனால் பெரும்பான்மை பெறுவதற்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் இரண்டு இடங்கள் குறைவாக உள்ளது.
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர சுயேட்சைகள் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எனவே இவர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி 76 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஓரிடத்தில் முன்னணியில் உள்ளது.
கலைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவையில் 58 இடங்களைப் பெற்றிருந்த முன்னாள் பிரதமர் தேவேகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னணியில் உள்ளது.
விந்திய மலைக்குத் தெற்கே முதல் முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஒரு தனிப்பெரும் கட்சியாக பாஜகவிற்கு முதன்முறையாகக் கிட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.