டெல்லியில் உள்ள பல்வேறு தொழில்நுட்பக் கல்வி மையங்கள் இணைந்து தொழில்நுட்பக் கண்காட்சி ஒன்றை நடத்துகிறது.
மே 29ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150 கல்வி மையங்கள் பங்கேற்கின்றன.
"எஜுசாட் 2008" எனப்படும் இந்த கண்காட்சியில் பெரிய கல்வி நிலையங்களின் பேராசிரியர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் விற்பனை பிரிவு அதிகாரிகள், வேலை பற்றிய கலந்தாய்வு, அயல்நாட்டில் கல்வி பற்றிய விவரங்கள் அனைத்தும் இடம்பெறும்.
இந்த கண்காட்சியில் பங்கேற்கும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது கல்வி நிலையங்களை அமைத்துள்ளன.
இந்த கருத்தரங்களில் பல்வேறு பதிப்பகங்கள் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களை வெளியிடுகின்றன.
மேலும் மாணாக்கர்கள் இந்த கருத்தரங்கிலேயே தாங்கள் விரும்பும் கல்வி நிலையத்தில் சேர்வதற்கான அனுமதிச் சான்றிதழை அந்த இடத்திலேயே பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கிற்கு எண்ணற்ற மாணாக்கர்களும், பெற்றோர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயர்கல்வித் தேர்வு முடிவுகள் வெளியான 1 வாரத்தில் இந்த கருத்தரங்கு நடைபெறுவதால் அதிகமான மாணாக்கர்கள் பயனடைவார்கள் என்று இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஈஎஃப்ஒய் குழு நிர்வாக இயக்குநர் ரமேஷ் சோப்ரா கூறினார்.