கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை தெரிய வந்துள்ள முன்னணி நிலவரங்களின்படி எந்தக் கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிகிறது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இரண்டு மணி நேர வாக்கு எண்ணிக்கைக்குப் பின் முன்னணி நிலவரங்கள் கிடைத்துள்ள 218 தொகுதிகளில் பாஜக 97 இடங்களில் முன்னணியில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி 83 இடங்களில் முன்னணியில் உள்ளது. தேவேகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், 33 இடங்களிலும், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் 5 இடங்களில் முன்னணியில் உள்ளன.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் மொத்த உள்ள 224 இடங்களில் அருதிப் பெரும்பான்மை பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸோ அல்லது பாஜகவோ அந்த எண்ணிக்கையை எட்டுவது சாத்தியமில்லை என்றே தெரிவதால் அங்கு மீண்டும் தொங்கு சட்டமன்றமே உருவாகும் நிலை உள்ளது.