கர்நாடகாவில் மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள 48 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று முதன்மைத் தேர்தல் அதிகாரி எம்.என்.வித்யாசங்கர் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் தேர்தல் அலுவலகத்திற்கும் அதிநவீனத் தகவல் தொடர்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காலை 8 மணிக்குத் துவங்கவுள்ள வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணியளவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறக் கூடும் என்று கருதப்படும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் அலுவலகங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
அரசமைவதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கக் கூடிய மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி அலுவலகத்திலும் பரபரப்பு காணப்படுகிறது.
முன்னதாக இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் தேவகவுடா இம்முறையும் கிங் மேக்கர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் வாக்குப் பதிவிற்குப் பிந்தைய கணிப்புகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.