ராஜஸ்தானில் பாரத்பூர் மாவட்டத்தில், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் வெடித்த கலவரத்திலும், அதைக் கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் காவலர் ஒருவர் உட்பட 5 பேர் பலியாகினர்.
பாரத்பூர் மாவட்டத்தில் ஜெய்ப்பூர் எல்லை அருகில் போராட்டம் நடத்தக் குவிந்த குஜ்ஜார் இனத்தவர்கள், அவர்களைத் தடுத்த காவலர்களுடன் மோதலில் இறங்கியதுடன், காவல்துறை வாகனங்கள் இரண்டையும் கொளுத்தினர். இதில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்துக் காவலர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் காவலர்களின் மீது கல்வீச்சு நடத்தியதுடன், துமாரியா- கர்வார் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையை பெயர்க்க முயன்றனர்.
அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு 4 பேர் பலியானதாக, ராஜஸ்தான் முதன்மை உள்துறைச் செயலர் வி.எஸ்.சிங் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் இதுவரை குஜ்ஜார் இனத்தவர் மீது காவல்துறையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூட்டிற்கு 26 பேர் பலியாகியுள்ளனர்.