கள்ளச்சாராய சாவுக்கு தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் ஆளுநர் ஆட்சியே காரணம் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் தேவகவுடா குற்றம்சாற்றியுள்ளார்.
காஞ்சிபுரம் சிறி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சாமி இன்று தரிசனம் செய்ய வந்த தேவகவுடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குமாரசாமி ஆட்சியில் கர்நாடகாவில் தீவிர மதுவிலக்கு அமலில் இருந்தது. அப்போது ஒருவர் கூட சாராயம் குடித்து இறக்கவில்லை. ஆனால் தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கு அங்குள்ள நிர்வாகமே காரணம் என்று கவுடா குற்றம்சாற்றினார்.
புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரை காத்திருக்காமல், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பங்களுக்கு கர்நாடகா ஆளுநர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கவுடா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த நிகழ்வுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். தவறான நிர்வாகமே இந்த நிகழ்வுக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார் கவுடா.
கர்நாடகா தேர்தல் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
கடைசியாக காமாட்சி அம்மன் கோயிலுக்கும், அகோபிலா மடத்துக்கு வந்துள்ளார் தேவகவுடா.