பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், அதுபற்றிய முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, மண்ணெண்ணெய், இயற்கை எரிவாயு, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2,00,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பெட்ரோலியத் துறை செயலர் எம்.எஸ்.ஸ்ரீநிவாசன், "இதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது" என்றார்.
விலைகளை உயர்த்த மத்திய அரசு தடை விதித்துள்ளதால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நெருக்கடி நிலையை விரைவில் அடையவுள்ளன.
இது மிகவும் எச்சரிக்கையான சூழ்நிலை. நெருக்கடியை முன்கூட்டியே தவிர்க்க நாங்கள் நினைக்கிறோம். சுங்க வரிகள் மற்றும் விற்பனை வரிகளை விலக்குவதுடன், விலை உயர்வையும் அமல்படுத்துவதன் மூலம்தான் இது சாத்தியம் என்றார் ஸ்ரீநிவாசன்.
முன்னதாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 135 டாலராக அதிகரித்துள்ளது பற்றிப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பொருளாதார நெருக்கடி பற்றி பிரதமர் கவலை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்ட மூன்று எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் நிதி மற்றும் பெட்ரோலியத் துறைச் செயலர்களையும் சந்திக்குமாறு தனது முதன்மைச் செயலரை கேட்டுக் கொண்டுள்ளார்" என்றார்.
விலை உயர்வு பற்றிய முடிவு இன்றோ நாளையோ எடுக்கப்பட்டு விடுமா என்று கேட்டதற்கு, 3 அல்லது 4 நாட்கள் கூட ஆகலாம் என்றார் அமைச்சர் முரளி தியோரா.