கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று வாக்குப் பதிவிற்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடகச் சட்டப் பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 25 ஆம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையுடன் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பின் விவரங்கள் வருமாறு:
காங்கிரஸ் கட்சி 86 முதல் 95 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக வரும். அதையடுத்து பா.ஜ.க. 79 முதல் 90 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் நிற்கும். தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களைப் பெறும். மீதமுள்ள 14 இடங்களை இதரக் கட்சிகள் பெறும்.
இதற்கிடையில் என்.டி.டி.வி. நடத்திய வாக்குக் கணிப்பு, பா.ஜ.க. 95 முதல் 112 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மை பெறும் என்று கூறுகிறது. காங்கிரஸ் 55 முதல் 75 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 45 முதல் 55 இடங்களையும் மட்டுமே பெறும் என்றும் அவ்வாக்குக் கணிப்பு கூறுகிறது.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஆனால் இத்தேர்தலில் எந்தக் கட்சியும் அத்தனை இடங்களில் வெற்றிபெறாது என்று வாக்குப் பதிவிற்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
"கிங் மேக்கர்' தேவகவுடா!
இதன்மூலம் எந்தக்கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. பா.ஜ.க., காங்கிரஸ் ஆகியவற்றில் எந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவைப் பெறுகிறதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தேவகவுடா மீண்டும் "கிங் மேக்கர்' அந்தஸ்தைப் பெறுகிறார்.
கடந்த 2004 தேர்தலில் பா.ஜ.க. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தன. அப்போது தேவகவுடா "கிங் மேக்கர்' ஆகச் செயல்பட்டார்.
தரம்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு பா.ஜ.க வுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைத்தது. ஆனால் இதுவும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. அதற்குள் உருவான அரசியல் நெருக்கடிகளால் கர்நாடகத்தில் சட்டப் பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தது.
மூன்றரை ஆண்டுகளில் தரம்சிங் (காங்கிரஸ்), ஹெச்.டி.குமாரசாமி (ம.ஜ.த.), பி.எஸ்.எடியூரப்பா (பா.ஜ.க.) ஆகிய மூன்று முதலமைச்சர்களை கர்நாடகம் கண்டுள்ளது.