கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலில் இறுதிக் கட்டமாக இன்று 69 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் சுமார் 55 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் இன்று 8 மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணி முதல் ஆண்களும் பெண்களும் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மாலை 5 மணி வரை நடந்த வாக்குப்பதிவின் போது குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூன்றாவது கட்டமாகவும் இறுதிக் கட்டமாகவும் இன்று நடந்த வாக்குப்பதிவில் சுமார் 55 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த 10 ஆம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 60 விழுக்காடு வாக்குகளும், 16 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 66 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 65 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் கர்நாடகச் சட்டப் பேரவையில் உள்ள 224 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு முடிந்து விட்டது. மூன்று கட்ட வாக்குப்பதிவிலும் பதிவான வாக்குகள் வருகிற 25 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மொத்தமாக எண்ணப்படுகின்றன.
கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மத்திய மாநிலப் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 58,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இருந்தாலும், மூன்று கட்ட வாக்குப்பதிவும் எதிர்பார்த்தபடி அமைதியாக நடந்து முடிந்துள்ளது குறித்து அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இன்று வாக்குப்பதிவு நடந்த 69 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம்சிங், கே.பி.சி.சி. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க.வை சேர்ந்த ஜெகதீஷ் சட்டார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.பி.பாட்டீல் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இவர்களின் தலையெழுத்தை 1.17 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.