குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் 2 சிங்கக் குட்டிகள் திறந்த கிணற்றில் விழுந்து பலியாகின.
கிலாவத் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் 2 சிங்கக் குட்டிகளின் உடல்கள் மிதப்பதைக் கண்ட கிராமவாசிகள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிங்கக் குட்டிகளின் உடல்களை மீட்டு, அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இதில் சிங்கக் குட்டிகள் இரண்டும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கிணற்றில் விழுந்த வேகத்தில் ஏற்பட்ட காயங்கள் அவற்றின் உடல்களில் இருந்தன.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான கிர் தேசியப் பூங்காவில், சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்து சிங்கக் குட்டிகள் பலியாவது அதிகரித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு இதேபோல சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராட்டிக் கொண்டிருந்த சிங்கக் குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
இந்தியாவிலேயே குஜராத்தின் கிர் வனப்பகுதியில்தான் அதிக எண்ணிக்கையிலான சிங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.