கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் மூன்று கட்டமாக நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று அங்கு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
8 மாவட்டங்களில் மொத்தம் 69 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1.17 கோடி வாக்காளர்கள் இங்கு உள்ளனர். மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் தரம்சிங், கே.பி.சி.சி. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க.வை சேர்ந்த ஜெகதீஷ் சட்டார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.பி.பாட்டீல் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இன்று தேர்தல் நடைபெறும் பெல்காம், பாகல்கோட், பிஜப்பூர், குல்பர்கா, பிடார், கடாக், தார்வாத் மற்றும் ஹாவேரி ஆகிய 8 மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக 58,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மே 10ந் தேதி முதல்கட்டமாக 89 சட்டசபை தொகுதிகளுக்கும், மே 16ந் தேதி இரண்டாம் கட்டமாக 66 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வரும் 25ந் தேதி மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.