ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சண்டை நிறுத்தத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்று பாகிஸ்தான் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட அடுத்த நாளே, பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம்சாற்றியுள்ளது.
இதுகுறித்துப் பி.டி.ஐ. நிறுவனத்திடம் பேசிய பாதுகாப்புப் பேச்சாளர் லெப்டினன்ட் கர்னல் எஸ்.டி.கோஸ்வாமி, "சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி திங்கட் கிழமையன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பூஞ்ச் மாவட்டம் மென்தார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது" என்றார்.
இந்திய ராணுவத்தினரின் எதிர்ப்பை விளக்கும் அறிக்கை ஒன்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பாகிஸ்தான் தரப்பில் இருந்து ராக்கெட்டுகள் கூட வீசப்பட்டதாகக் கூறினார்.
பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்துள்ளதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான 5ஆவது கட்ட அமைதிப் பேச்சுக்கள் இஸ்லாமாபாத்தில் துவங்கியுள்ள நிலையில் இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாகிஸ்தான் அயலுறவுச் செயலர் சல்மான் பஷீருடன் பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், "சண்டை நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதில் இருதரப்பும் உறுதியாக உள்ளன" என்றார்.