நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் சிச்சுவான் மாகாணத்திற்கு மேலும் மூன்று விமானங்களில் தற்காலிகக் கூடாரங்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்புகிறது.
சீனாவின் சிச்சுவான் மகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை 71,000 த்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த இன்னும் மூன்று ஐ.எல்.-76 சரக்கு விமானங்களில் 200 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் செங்டுவைச் (சிச்சுவான் தலைநகர்) சென்றடையும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கான்பூரில் இருந்து மருந்துகளும் கூடாரங்களும் ஏற்றப்பட்ட ஒரு ஐ.எல்.- 76 விமானம் நாளை புறப்படுகிறது. மற்ற இரண்டு விமானங்களும் அடுத்தடுத்த நாட்களில் புறப்படும் என்று இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களில் 64 டன் நிவாரணப் பொருட்களைச் சீனாவிற்கு இந்தியா அனுப்பியுள்ளது. சீன அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் இன்னும் அதிகமான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.