நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆதரவாகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தா காரத், அச்சட்ட வரைவு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதிநாள் அன்று பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்ட வரைவு மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
மூத்த காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்ட வரைவு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது.
இக்குழு முதன்முறையாக வருகிற 27 ஆம் தேதி கூடுகிறது. இக்குழு தனது அறிக்கையை மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முதலில் ஆண்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட இக்குழுவில் பின்னர் பா.ஜ.க. உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா, காங்கிரஸ் உறுப்பினர் பிரபா தாகூர் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது பெண்ணாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தா காரத் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பி.டி.ஐ. நிறுவனத்திடம் பேசிய குழுவின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன், "குழு உறுப்பினர்கள் சம்மதித்தால் ஜூன் மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் கூடி எங்கள் பணியை முடிப்போம்" என்றார்.
பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்ட வரைவு தொடர்பான தங்கள் கருத்துக்களை ஜூன் 10 ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் என்றும், ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குழுவின் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்துக்களை வரவேற்று ஏற்கெனவே பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
இக்குழுவில் மக்களவைக்கு ஒதுக்கப்பட்டதில் காலியாக உள்ள 5 இடங்கள் விரைவில் நிரப்பப்படும். அப்போது பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.