ஜம்மு- காஷ்மீர் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் முறைகேடின்றி வெளிப்படையாக நடக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் முகமது ஷா புது டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரின் இல்லத்தில் சந்தித்து சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தார்.
அப்போது, தேர்தல் முறைகேடின்றி வெளிப்படையாக நடப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததாக குலாம் முகமது ஷாவின் அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலைக் கண்காணிக்க நடுநிலையான பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர், அதற்குத் தகுந்த ஆட்களின் பட்டியலை அளிக்குமாறு ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஜம்மு- காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு இருபுறமும் உள்ள தலைவர்களை அழைத்து விவாதிப்பதற்கான காஷ்மீருக்கு இடையிலான அமைதி மாநாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஷா பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு பிரதமர், அத்தகைய மாநாட்டிற்கு யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்ற பட்டியலை ஷாவிடம் கேட்டுள்ளார்.
மேலும், காஷ்மீருக்கு உள்ளேயும் வெளியேயும் பொய் வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீரிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் குலாம் முகமது ஷா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரிக்கத் துவங்கிய 1989 ஆம் ஆண்டில் இருந்து நடந்த எந்தத் தேர்தலிலும் அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.