தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நிறைவேற்றப்படும், அதற்கான கருத்தொற்றுமை ஐ.மு.கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவளிக்கும் கட்சிகளிடையில் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அணுசக்தி உடன்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ. - இடதுசாரிகள் உயர்மட்டக் குழு வருகிற 28 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தொழில்துறை இணை அமைச்சர் அஷ்வனி குமார், "தேச நலனிற்கு முக்கியத்துவம் அளித்து மக்கள் கருத்தைப் பெற்று இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நிறைவேற்றப்படும்" என்றார்.
உயர்மட்டக் குழுக் கூட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், "இக்கூட்டத்திற்குப் பிறகு சூழ்நிலை மாறும்" என்றார்.
"மத்திய அரசின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள், எதிர்த் தரப்பினரை திருப்திப்படுத்தி அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்ற முயற்சிப்பார்கள்" என்று அஷ்வனி குமார் குறிப்பிட்டார்.
புத்தாயிரம் ஆண்டுகள் இலக்குகளில் ஒன்றான மாசுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள சுத்தமான எரிசக்தி அவசியம். அதற்கு அணுசக்தி உடன்பாடு உதவும் என்றார் அவர்.