இந்தியா- பாகிஸ்தான் இடையே 4-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று இஸ்லாமாபாதில் தொடங்குகிறது
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நட்புறை மேம்படுத்தும் வகையில் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்துள்ள புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் முடிவு செய்தன. இதன்படி இஸ்லாமாபாத்தில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
முதலில் 4ஆவது கட்டப் பேச்சுவார்த்தையின் இறுதிப் பகுதியும், அடுத்ததாக 5ஆவது கட்டப் பேச்சுவார்த்தையும் நடக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமத் குரேஷி ஆகியோர் ஈடுபடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சியாச்சின் பனிப்பிரதேசத்தில் எல்லைப் பிரச்சினை உள்பட 8 பிரச்சினைகளை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இரு நாடுகளின் எல்லையில் வசிக்கும் மக்களிடையே தகவல் தொடர்பு அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்காக ஜம்மு- சியால்கோட் மற்றும் கார்கில்- ஸ்கார்டு இடையே பஸ் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
எனினும் பாகிஸ்தான் தரப்பில் இதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டது.
சியாச்சின் பனிமலைப் பிரதேசத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று இந்தியா கோரி வருகிறது. இதில் பாகிஸ்தான் அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த பிரச்னை குறித்தும் பேச்சு நடத்தப்படும்.