இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே லாரிகளில் சரக்கு போக்குவரத்து துவக்குவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி வழியாக லாரிகளில் சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.
தற்போது காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் இருந்து கட்டுப்பாட்டு எல்லை கோட்டின் வழியாக முஜாபரபாத் நகருக்கு லாரிகளில் சரக்கு போக்குவரத்து துவங்க இரு நாடுகளுக்கும் இடையே இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
இஸ்லாமாபாத்தில் இரு நாட்டு அயலுறவு அமைச்சர்களும் மே 21-ஆம் தேதி சந்தித்து பேசுகின்றனர். அப்போது இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இஸ்லாமாபாத்தில் இரு நாட்டு அயலுறவு அமைச்சர்கள் புதன்கிழமை சந்திக்கும் போது, இதுவரை நடந்துள்ள நான்கு கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றி ஆய்வு செய்வார்கள். அத்துடன் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தையையும் நடத்த உள்ளனர்.
இதற்குமுன், நாளை இரு நாட்டு அயலுறவு செயலாளர்களும், ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவது உட்பல பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றார்கள்.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானின் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரோசியை சந்தித்து பேசுகிறார்.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு, அமைந்த புதிய அரசுடன், இந்தியா முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த வர்த்தகர்கள், எல்லைக் கோட்டிற்கு அப்பால் உள்ள பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் நீண்ட நாட்களாக லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து துவக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்திய பகுதியில் எல்லைக் கோட்டிற்கு அருகே கிடங்கிகள், சுங்கச் சாவடி போன்று அமைக்கப்பட்டுவிட்டன. அத்துடன் பாரமுல்லாவில் இருந்து எல்லைக் கோட்டில் உள்ள கமான் பாதுகாப்பு சாவடி வரை வாகனங்கள் செல்வதற்கு இருவழி சாலை அமைக்கப்பட்டு விட்டன.
பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், ஸ்ரீநகருக்கும், முஜாபரபாத்திற்கு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து துவங்க பாகிஸ்தான் அரசு முடிவெடுக்க தாமதமாகியது.
இத்துடன் இந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே அதிக அளவு பேருந்து போக்குவரத்தை துவக்க இந்தியா வலியுறுத்தும் என்று தெரிகிறது.
இப்பொழுது ஸ்ரீநகருக்கும், முஜாபரபாத்திற்கும் இடையேயும், பூஞ்ச்-ராவலாகாட் இடையேயும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பேருந்து இயக்கப்படுகிறது. இதை வாரம் ஒரு முறை இயக்க இந்தியா வலியுறுத்தும் என்று தெரிகிறது.
இத்துடன் இந்தியாவின் சார்பில், கார்கில்-சகார்டு, ஜம்மு-சியால்காட் இடையே புதிதாக பேருந்து துவக்க வலியுறுத்தப்படும்.
இந்தியா தயார் நிலையில் உள்ளது என்பதை ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், இந்தியா நாளையே கூட எல்லைக் கோட்டின் வழியாக வர்த்தகத்தை துவக்க தயாராக உள்ளது. தற்போது பாகிஸ்தான் தான் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
எல்லைக்கோடு சாலை அமைப்பு நிறுவனத்தைச் சேர்ந்த, திட்ட பிரிவு தலைமை பொறியாளர் பிரிகேடியர் அசோக் புடானி கூறுகையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு வரை வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகளில் மராமத்து பணிகள் விரைவில் முடிந்துவிடும். யூரி பகுதியில் உள்ள காவல் சாவடி முதல் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு வரை உள்ள சாலையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்னும் 5 முதல் 6 கி.மீ வரை உள்ள சாலையே சீரமைக்கபட வேண்டியதுள்ளது. தார் போடும் வேலை முடிவடைய வேண்டியதுள்ளது. இந்த வேலை இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.
1947 இல் இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரிவினை ஏற்பட்டதற்கு பிறகு, 58 ஆண்டுகள் கழித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி 2005 ஏப்ரல் 7 ந் தேதி ஸ்ரீநகரில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கேரவன்-இ-அமான் என்ற பெயரிடப்பட்ட பேருந்து போக்குவரத்தை துவக்கி வைத்தனர். இது 1947 இல் ஏற்பட்ட பிரிவினையால், நீண்டகாலமாக பிரிந்திருந்த உறவினர்கள் சந்தித்து மகிழும் வாய்ப்பை உருவாக்கியது.
ஜூலுன் பள்ளத்தாக்கு சாலை என்று அழைக்கப்படும் 170 கி.மீ நீளமுள்ள ஸ்ரீ நகர்-முஜாபரபாத் நெடுஞ்சாலையில், 1947 ஆம் வருடம் அக்டோபர் 27 ந் தேதி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த பழங்குடியினர் இந்த பகுதியில் ஊடுருவி ஆக்கிரமித்தனர். பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.