அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி, ஒரிசாவில் சாதி அடிப்படையிலான அரசியலைப் புகுத்த முயற்சிக்கிறார் என்று அம்மாநில ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் குற்றம்சாற்றியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் மொஹந்தி ரூர்கேலாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உத்தரப் பிரதேசம், உத்ரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் அரசியல் ரீதியாகத் தோல்வியடைந்துவிட்ட பிறகு ஒரிசா வந்துள்ள ராகுல் காந்தி, இங்கு சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்" என்றார்.
மேலும், "எங்கள் மாநில மக்கள் சாதி அரசியலில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. ராகுல் காந்தி இதை உணர்ந்து கொண்டு சாதி அரசியலைக் கைவிட வேண்டும்.
இல்லையென்றால், சாதிப் பாகுபாடின்றி வாழ்ந்து வரும் ஒரிசா மக்கள், வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார் ஆனந்த் மொஹந்தி.
முன்னதாக ராகுல் காந்தி ஒரிசாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்டோருடன் சேர்ந்து உணவும் அருந்தினார்.