ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் 3 பேரின் வரைபடங்களைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு நடந்து நான்கு நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
குண்டுகளை வைக்கப்பட்டிருந்த சைக்கிளை வாங்க வந்தவர்கள் வங்கமொழி பேசியதாகச் சைக்கிள் கடைக்காரர் தெரிவித்துள்ளார். எனவே தாக்குதல் நடத்தியவர்கள் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹியூஜி தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களை வைத்து ஏற்கெனவே 4 வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 3 பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஒரு படம், காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற சிமி இயக்கத் தலைவனின் சாயலில் உள்ளது.
இவர்கள்தான் குண்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று நம்பப்பட்டாலும், முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மையான விவரங்கள் தெரியவரும்.
முன்னதாக ஜெய்ப்பூரில் வசிக்கும் 48 வங்காள தேசத்தினரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ராஜஸ்தானில் மட்டும் 50,000 வங்காள தேசத்தினர் சட்ட விரோதமாகக் குடியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.