Publish Date: Sat, 17 May 2008 (20:32 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
இந்தியக் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் பூடான் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
பூடானில் முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசிற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், பூடான் மாணவர்களை கல்வியில் ஊக்கபடுத்தும் விதமாக இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் பயில நேரு வாங்க்சுக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பூடானின் வாங்க்சுக் முடியாட்சியின் நூறாவது ஆண்டு விழாவை கருத்தில் கொண்டும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பூடான் சென்று 50 ஆண்டுகள் நிறைவுபெறும் விழாவை முன்னிட்டும் பூடான் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அவர் கூறினார்.