வாக்கு வங்கியை மையமாகக் கொண்டு மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றி வரும் கொள்கைகளால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து அதிகரித்துள்ளது என்று பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாற்றியுள்ளார்.
தனது குறுகிய காலத் தேர்தல் பலன்களுக்காக, அப்பாவி மக்களின் உயிர்கள் என்ற மிகப்பெரிய விலையை இந்தியா கொடுக்குமாறு காங்கிரஸ் செய்துள்ளது என்ற அத்வானி, அதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சதிவேலைகளைக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த 4 ஆண்டுகளில் டெல்லி, அயோத்தி, வாரணாசி, மும்பை, பெங்களூரு, மலேகான், ஹைதராபாத், அஜ்மீர், ஜம்மு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் இலக்குகள் குறிப்பிடத்தக்க வகையில் விரிவாகியுள்ளதையே காட்டுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மேற்கண்ட தாக்குதல்கள் தொடர்பான ஒரு வழக்கில் கூட விசாரணை முறையாக நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை" என்றார்.
மேலும், "பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை விட வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெரும்பாலான தாக்குதல்களில் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத்- உல் ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹியூஜி) இயக்கத் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதே இதற்குச் சாட்சி" என்றார் அத்வானி.