நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்ற வாக்குறுதியை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதை நிரூபித்தால் அவனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஷா கிலானி கூறியிருப்பதை வைத்துப் பார்க்கையில், தாவூத் இப்ராகிம் அங்குதான் உளளார் என்று உறுதியாகத் தெரிகிறது என்றார் அத்வானி.
"தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று முதல்முறையாக இஸ்லாமாபாத் ஒப்புக் கொண்டுள்ளது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் அவர்.
1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்துவரும் இந்திய நீதிமன்றங்கள், சர்வதேசக் காவல்துறையான இன்டர்போல், அமெரிக்க நீதிமன்றங்கள் ஆகியவை தாவூத் இப்ராகிமைத் தலைமறைவுக் குற்றவாளி என்று அறிவித்துள்ளதைக் குறிப்பிட்ட அத்வானி, பாகிஸ்தான் தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.