கர்நாடக சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10ஆம் தேதி 89 தொகுதிக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.
இன்று 66 தொகுதிகளுக்கு 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற 56,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
காலை 7.15 மணிக்கு ஷிகாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களித்தார். இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் பங்காரப்பா, துணை முதல்வர் எம்.பி.பிரகாஷ், காங்கிரஸ் பிரமுகர் ஆர்.வி. தேஷ்பாண்டே, சினிமா நடிகர் சசிகுமார் உட்பட 589 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எந்த ஒரு தொகுதியிலும் அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடை பெறவில்லை என்று கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி எம்.என்.வித்யாசங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உடுப்பி மாவட்டத்தில் கல்லூரி விரிவுரையாளர், தலைமை காவலர் ஆகியோரை நக்சலைட்டுகள் சுட்டுகொன்றனர். இதனால் உடுப்பி, ஷிமோகா, சிக்கமகளூரு பதற்றம் நிலவியதால் அங்கு வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.
மாலை 5 மணியுடன் முடிவுற்ற வாக்குப் பதிவு சுமார் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.