கர்நாடக சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 66 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாலை 5 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை முதலே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிகளில் சுமார் 56,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் உட்பட மொத்தம் 589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் தகுதியை 1.10 கோடி வாக்காளர்கள் பெற்றுள்ளனர்.
66 தொகுதிகளில் மொத்தம் 12,271 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.
முதல் கட்டமாக கடந்த 10ஆம் தேதி 89 தொகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 22ஆம் தேதி 66 தொகுதிகளுக்கு இறுதிகட்ட தேர்தல் நடைபெறுகிறது.