ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு நாங்கள் தான் காரணம் என்று இந்தியன் முஜாகிதீன் என்ற இயக்கம் கூறியுள்ளது.
ஜெய்ப்பூரில் கடந்த 13ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வில் 63 பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு வங்கதேசத்தை சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என கருதி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே குண்டுவெடிப்புக்கு காரணமான வாலிபரின் புகைப்படத்தை புலனாய்வு துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு தாங்களே காரணம் என்று இந்தியன் முஜாகிதீன் எனும் இயக்கம் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பில் மின்னஞ்சல் ஒன்று இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலுடன் வீடியோ காட்சி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், சைக்கிள் ஒன்றின் மீது பை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பையில்தான் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலா துறையை நிலைகுலைய வைக்கும் வகையில் ஜெய்ப்பூரில் இந்த தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அந்த மின்னஞ்சலை ராஜஸ்தான் காவல்துறைக்கு அந்த தொலைக்காட்சி அனுப்பி உள்ளது.
இந்நிலையில் வழிபாட்டு தலங்களும், மக்கள் அதிகமாக கூடும் ஜெய்ப்பூர், அஜ்மீர், நார்த்வாரா ஆகிய இடங்களை தாக்க கூடும் என்று புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.