ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அடுத்தடுத்து நடந்த 5 குண்டுவெடிப்புகளில் 12 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதிகளான திரிபோலியா பஜார், ஜோஹரி பஜார், மாணிக் செளக், பேடி செளபாட், சோட்டி செளபாட் ஆகிய இடங்களில் இன்று மாலை 7.35 மணியளவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். திரிபோலியா பஜார் அருகில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்ததால் நெருக்கடி ஏற்பட்டு அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புகள் 10 நிமிட இடைவெளியில் நடந்ததாகவும், இதில் ஒரு குண்டு காரிலும் மற்றொன்று கடை ஒன்றிலும் வெடித்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று ராஜஸ்தான் காவல்துறைத் தலைமை இயக்குநர் ஏ.எஸ்.கில் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்களும் இதை உறுதி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஜெய்ப்பூர் நகருக்கு தேசியப் பாதுகாப்புப் படையினரும், வெடிகுண்டு வல்லுநர்களும் விரைந்துள்ளனர்.