பூடானில் அண்மையில் நடந்த தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள புதிய நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.
மன்னராட்சி நடந்து வந்த பூடானில் கடந்த மார்ச் 24- ஆம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயணமாக பூடான் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்க்யேல் வாங்சுக், முன்னாள் மன்னர் ஜிக்மி சிங்ஜே வாங்சுக், பூடான் பிரதமர் ஜிக்மி ஓய் தின்லே உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுவதுடன், நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றுகிறார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பூடானிற்குச் சென்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு மன்மோகன் சிங்கின் பயணம் அமைக்கப்பட்டுள்ளது.
அவர் தனது பயணத்தின்போது 1095 மெகா வாட் உற்பத்தித் திறன் உள்ள நீர் மின் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார். முன்னாள் பிரதமர் நேரு பூடான் சென்றபோது 1020 மெகா வாட் உற்பத்தித் திறன் உள்ள நீர் மின் உற்பத்தித் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.