இந்தியர்கள் அயல்நாடுகளில் வாழும்போது அவர்களின் அடிப்படை உரிமைகளைத் தங்களால் பாதுகாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஃபிரான்சில் வசிப்பவர்கள் தங்களின் மதச் சின்னங்களை வெளிப்படையாக அணிவதற்குத் தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கும் தடை விதிக்கப்படும்.
இதை எதிர்த்து சிங் சட்ட அறக்கட்டளை என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதில், "தலைப்பாகை அணிவதை ஃபிரான்ஸ் சட்டம் தடை செய்வது, அந்நாட்டில் வாழும் இந்தியர்களான சீக்கியர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். அயல்நாட்டு மண்ணில் உரிமைகளைப் பாதுகாப்பது இங்குள்ள அரசின் கடமையாகும்.
இந்தியக் குடிமக்கள் இந்தியாவில் வசித்தாலும் அயல்நாடுகளில் வசித்தாலும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, "ஃபிரான்ஸ் சட்டத்திற்கு எதிராக ஏதாவது கோரிக்கை இருந்தால் அந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை நாடலாம். ஐரோப்பிய நீதிமன்றத்திற்கோ சர்வதேச நீதிமன்றத்திற்கோ செல்லலாம்.
எங்களால் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை இந்திய எல்லைக்குள்தான் பாதுகாக்க முடியும். அயல்நாட்டு மண்ணில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியாது" என்று கூறியது.
அதற்குச் சீக்கிய அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அயல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்து உள்ள இந்தியர்களின் பண்பாட்டு நலன்கள், மதம் சார்ந்த நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
அதற்கு, இந்த விடயத்தை ஃபிரான்ஸ் அதிகாரிகளிடம் மத்திய அரசு எடுத்துச் செல்லலாம் என்ற நீதிமன்றம், உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.