ராணுவத் தளவாட உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனியாரும் பங்கேற்பது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
புது டெல்லியில் நடந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தொழில்நுட்ப தின விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
"தனியார், அரசு கூட்டுத்துறை முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். தளவாட துறையில் தனியாரையும் பங்கு பெறச் செய்வது அவசியம். இதன் மூலம் முக்கியக் கருவிகள் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உருவாகும்.
நாட்டின் தனியார், பொதுத்துறைகளில் உள்ள வளம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், திறன், அறிவுசார் மூலதனம் எல்லாம் இந்த நாட்டின் சொத்துக்களாக கருதப்பட வேண்டும். அவற்றை கவனமாகவும் சீரிய முறையிலும் பயன்படுத்த வேண்டும்" என்றார் பிரதமர்.
மேலும், "அதிவேக, நவீன ராக்கெட்டுகள், ஆளில்லாத நவீன விமானங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதற்குத் தேவையான, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
மைக்ரோ, நானோ தொழில்நுட்பம் மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்பங்களின் மூலம் வழக்கத்தில் இல்லாத புதிய கருவிகளை உருவாக்க வேண்டும்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு மற்றும் தயார் நிலை என்பது எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல. எந்தெந்த இடங்களில் நாம் பின்தங்கி உள்ளோமோ அங்கு நமது விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும்.
எந்தச் சூழ்நிலையிலும் நமது ராணுவம் தயார் நிலையில் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக ராணுவத் தளவாட உற்பத்தித் துறையை விரிவாக்க அரசு திட்டமிட்டுள்ளது" என்றார் அவர்.
நமது ராணுவத்துக்குத் தேவையான கருவிகள் முழுவதையும் நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வசதி நம்மிடம் இல்லை என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் நடராஜன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.