மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அம்மாநில அரசிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நந்திகிராம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடந்தது. இதை முன்னிட்டு நந்திகிராமில் ஏராளமான மத்திய ரிசர்வ் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும், மத்திய ரிசர்வ் காவலர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. அப்போது பெண் ஒருவரை மத்திய ரிசர்வ் காவலர்கள் மானபங்கப்படுத்தினர்.
இச்சம்பவத்தை ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிய நிலையில், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று மத்திய ரிசர்வ் காவல்படை டி.ஐ.ஜி. மறுத்தார்.
பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து நந்திகிராமில் பதற்றம் அதிகரித்துள்ளது. இச்சம்பவம் குறித்தும், அதற்குப் பிந்தைய நிலை குறித்தும் முழுமையாக அறிக்கை அளிக்குமாறு மேற்குவங்க அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.