கர்நாடகாவில் முதல்கட்டமாக மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் பரவியிருக்கும் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்குத் துவங்கும் வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது.
சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் ரிசர்வ் காவலர்கள், மாநிலக் காவலர்கள், துணை ராணுவப் படையினர் உள்பட சுமார் 58,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறை தலைவர் சிறி ராம்குமார் தெரிவித்தார்.
89 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 18,562 வாக்குச் சாவடிகளில் மிகவும் பதற்றம் நிறைந்தவை 6,252 என்றும் பதற்றமானவை 3,500 என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
களத்தில் 952 வேட்பாளர்கள்!
முதல் கட்டத் தேர்தலில் 952 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் தலையெழுத்தை 84 லட்சத்து 14ஆயிரத்து 624 பெண்கள் உள்பட 1 கோடியே 14 லட்சத்து 88 ஆயிரத்த 358 வேட்பாளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு தேர்தலைச் சந்திக்கும் நாட்டிலேயே முதலாவது மாநிலம் கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவருமான எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சீதாராமையா, முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார் (காங்கிரஸ்), டி.எச். சங்கரமூர்த்தி (பா.ஜ.க.), எச்.விஸ்வநாத் (காங்கிரஸ்), எச்.டி.ரேவண்ணா (மதசார்பற்ற ஜனதா தளம்) ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
பலத்த பாதுகாப்பிற்கிடையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் அமைதியாக முடிந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி, மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் தேவகவுடா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் தங்களது சூறாவளிப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ், பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி உள்ளிட்ட எல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இந்தத் தொகுதிகளில் கடந்த 2004 ஆண்டு நடந்த தேர்தல்களில் மதசார்பற்ற ஜனதா தளம் 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், பா.ஜ.க. 15 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
மீதமுள்ள 155 தொகுதிகளில் 66 தொகுதிகளுக்கு மே 16 ஆம் தேதியும், 89 தொகுதிகளுக்கு மே 22 ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது.