காஷ்மீரில் இன்று சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
சம்பா பிரிவில் உள்ள பெங்லார்ட் பகுதியில் நேற்றிரவு 10.30 மணி முதல் 10.45 மணி வரை 10 முதல் 15 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைய முயன்றனர்.
இதில் 4 முதல் 5 தீவிரவாதிகள் எல்லையை நெருங்கினர். அதற்குள் பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டதுடன் கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதையடுத்து இருதரப்பிற்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. இதில் தீவிரவாதிகள் தரப்பில் 1,000 சுற்றுகளுக்கு மேல் சுடப்பட்டதாகவும், 50 கையெறி குண்டுகளுக்கு மேல் வீசப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்து தீவிரவாதிகளின் 450 க்கும் மேற்பட்ட ஏ.கே. ரக துப்பாக்கி குண்டுப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியைக் கண்டித்து ஜம்முவில் இன்று பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர்.
இம்மோதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வேலிகளைத் தீவிரவாதிகள் உடைத்துள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் ஆஷிஸ் மிஸ்ரா ஜம்முவில் முகாமிட்டு நிலைமையை ஆய்வுசெய்து வருகிறார்.