பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை காஷ்மீர் எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
இதில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேற்றிரவு 10.40 மணியளவில் துப்பாக்கியால் சுட்டபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.
பாதுகாப்புப் படையினரின் மீது தீவிரவாதிகள் சுமார் 1,000 சுற்றுக்கள் சுட்டதுடன், 16 கையெறி குண்டுகளை வீசி்னர்.
இதையடுத்து ஜம்மு சரகப் பாதுகாப்புப் படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இம்மோதலில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லையென்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அந்நாட்டு ராணுவத்தினர் இருந்ததற்கு ஆதாரமில்லை என்றும் நமது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியைக் கண்டித்து ஜம்முவில் இன்று பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர்.
இம்மோதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வேலிகளைத் தீவிரவாதிகள் உடைத்துள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் ஆஷிஸ் மிஸ்ரா ஜம்முவில் முகாமிட்டு நிலைமையை ஆய்வுசெய்து வருகிறார்.