கர்நாடகத்தில் முதல் கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள 89 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி, மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் தேவகவுடா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் தங்களது சூறாவளிப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரித்தனர்.
மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு தேர்தலைச் சந்திக்கும் நாட்டிலேயே முதலாவது மாநிலம் கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 10 ஆம் தேதி சனிக்கிழமை தேர்தல் நடக்கவிருக்கும் தெற்கு கர்நாடகாவில் 11 மாவட்டங்களில் பரவியிருக்கும் 89 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவருமான எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சீதாராமையா, முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார் (காங்கிரஸ்), டி.எச். சங்கரமூர்த்தி (பா.ஜ.க.), எச்.விஸ்வநாத் (காங்கிரஸ்), எச்.டி.ரேவண்ணா (மதசார்பற்ற ஜனதா தளம்) ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
பலத்த பாதுகாப்பிற்கிடையில் தேர்தல் பிரச்சாரம் அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான உத்தரவு காரணமாக சுவர் விளம்பரங்களையோ, சுவரொட்கள் மற்றும் தட்டிகளையோ எங்கும் காண முடியவில்லை.
பொதுக் கூட்டங்களிலும் பெருமளவிளான மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று மட்டுமே வாக்குச் சேகரித்தனர்.
தேர்தலை முன்னிட்டு மத்தியப் பாதுகாப்புப் படைகள் மற்றும் மாநிலக் காவல் படைகளைச் சேர்ந்த 58,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.