இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு எல்லா விதத்திலும் செத்துவிட்டதாக இடதுசாரிக் கட்சிகள் கூறியுள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ரூப் சந்த் பால், ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலர் ஜி.தேவராஜன் ஆகியோர் கூறுகையில், "அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு எல்லா விதத்திலும் செத்துவிட்டது" என்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், "அணுசக்தி உடன்பாடு இந்தக் கணத்தில் சட்டப்படி செல்லாததாகிவிட்டது. ஆனால், அது இன்னும் செத்துவிடவில்லை. உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ள அமெரிக்க அரசு அதற்காக எந்த எல்லை வரையும் செல்லக்கூடும்" என்றார்.
அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க அரசு எந்த எல்லை வரையும் செல்லும் என்று எச்சரித்த எ.பி.பரதன், "அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்கள், அரசியல் லாபம், வணிகம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அணுசக்தி உடன்பாட்டிற்காகச் சட்டங்களை மாற்றவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்" என்றார்.
ரூப் சந்த் பால் மற்றும் தேவராஜன் ஆகியோர் கூறுகையில், "யு.பி.ஏ.- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டம் மே 28 ஆம் தேதி நடக்கவுள்ளது. அப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும்.
அந்த நேரத்தில் அமெரிக்க அரசினால் எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்க முடியாது. புதிய அமெரிக்க அரசு அடுத்த ஜனவரியில்தான் அமையும். இதனால், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு எல்லா விதத்திலும் செத்து விட்டது" என்றனர்.