எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால் பதவி விலகியதற்குக் காரணமான சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை அடுத்து மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சரைத் தாக்கியதோடு நிற்காத பா.ஜ.க., தேச முக்கியத்துவம் வாய்ந்த முன்னணிக் கல்வி நிறுவனத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்று பிரமதர் மன்மோகன் சிங் மீதும் பாய்ந்துள்ளது.
இதுகுறித்து புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், "அன்புமணி ராமதாஸ் பதவிவிலக வேண்டும் என்று நான் கோருகிறேன். அவ்வாறு அவர் பதவிவிலகாவிட்டால், அவரைப் பதவிநீக்க பிரதமர் முன்வர வேண்டும்" என்றார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், "இது அன்புமணி ராமதாசிற்கும் அவரின் மனப்பான்மைக்கும் கிடைத்த தோல்வி. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அவரது அரசிற்கும் கிடைத்த தோல்வி" என்றார்.
சுகாதார அமைச்சர் தனது தனிப்பட்ட நலனிற்காக நாடாளுமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது என்றும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.