அகில இந்திய மருத்து அறிவியல் கழக (எய்ம்ஸ்) இயக்குநரின் ஓய்வு வயதை நிர்ணயிக்கும் சட்டத் திருத்தம் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, எய்ம்ஸ் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மருத்துவர் வேணுகோபால் மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட உள்ளார்.
தான் பதவிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர் வேணுகோபால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எய்ம்ஸ் சட்டத் திருத்தம் சட்ட விரோதமானதால் அது செல்லாது என்று இன்று தீர்ப்பளித்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஹெச்.எஸ்.பேடி ஆகியோர், எய்ம்ஸ் சட்டத் திருத்தம் முழுக்க முழுக்க மருத்துவர் வேணுகோபாலை மட்டும் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டனர்.
எய்ம்ஸ் இயக்குநர் பதவியில் உள்ளவர் 5 ஆண்டுகளுக்கோ அல்லது 65 வயது வரையோ மட்டுமே அப்பதவியில் நீடிப்பார் என்று நிர்ணயம் செய்யும் சட்டத் திருத்த வரைவு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு, குடியரசுத் தலைவராலும் கையெழுத்திடப்பட்டது.
இதையடுத்து எய்ம்ஸ் இயக்குநர் பதவியில் இருந்த மருத்துவர் வேணுகோபாலை, அவருக்கு 65 வயதிற்கு மேலானதைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மத்திய அரசு பதவி நீக்கியது.
எய்ம்ஸ்-ன் தற்காலிக இயக்குநராக பேராசிரியர் டி.டி. டொக்ரா நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கும் எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் இடையில் பனிப்போர் நீடித்துவந்த நிலையில், வேணுகோபாலைக் குறிவைத்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.