Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்னி-3 சோதனை முழு வெற்றி!

அக்னி-3 சோதனை முழு வெற்றி!
, புதன், 7 மே 2008 (15:00 IST)
3,000 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான தரை இலக்குகளை சாதாரண மற்றும் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கவல்ல இந்தியாவின் அக்னி 3 சோதனை முழு வெற்றி அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரிசா மாநிலம் பலாசூர் மாவட்ட கடற்பகுதியிலுள்ள வீலர் தீவிலிருந்து இன்று காலை 09.56 மணிக்கு செலுத்தப்பட்ட அக்னி 3, புவியின் காற்று மண்டலத்தைக் கடந்து சென்று 800 நொடிகள் பறந்து மீண்டும் காற்று மண்டலத்திற்குள் புகுந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியதாக, இதனை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (DRDO) விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அக்னி 3 சோதனை இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள நிலையில், 3,000 கி.மீ. தூர இலக்குகளைத் தாக்கவல்ல நீண்ட தூர ஏவுகணைகளைப் பெறறுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது மட்டுமின்றி, சீனாவின் தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களைத் தாக்கவல்ல திறனை இந்தியா பெற்றுவிட்டது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

இரண்டாவது முறையாக அக்னி-3 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதால், இந்திய இராணுவத்தின் ஆயுத படையில் சேர்க்கப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் விஞ்ஞானி சந்தானம் கூறியுள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை வரும் திங்கட்கிழமை இவ்வமைப்பு கொண்டாடவுள்ள நிலையில், அதன் திறனுக்கு சான்று பகரும் வகையில் அக்னி-3 சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று கூறிய விஞ்ஞானிகள், இதனைத் தொடர்ந்து 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்ல - கண்டம் விட்டு கண்டம் பாயும் - ஏவுகணைத் தயாரிப்பில் இந்தியா ஈடுபடும் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள அக்னி-3 ஏவுகணை வடிவு விரைவில் சோதிக்கப்படும் என்று பா.ஆ.மே.க. தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil