புது டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட வரைவு மாநிலங்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டதை காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.
இருந்தாலும் சமாஜ்வாதி கட்சி மட்டும், இச்சட்ட வரைவைத் தொடர்ந்து எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.
பெண்களுக்கு வழங்கப்படும் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் வரை இந்தச் சட்ட வரைவிற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் கூறினர்.
முன்னதாக, மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவின் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்கவும் அவர்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!
பாலின வேறுபாட்டிற்கு முடிவு கட்டும் முக்கியமான நடவடிக்கை இது என்று பெண்கள் இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட மத்திய சட்ட அமைச்சர் ஹெச்.ஆர்.பரத்வாஜ், "இதனால் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறென். இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு" என்றார்.
காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்ட வரைவுபற்றி மற்ற அரசியல் கட்சிகள் பேசியிருக்கலாம். ஆனால், நாங்கள்தான் அதை அறிமுகம் செய்துள்ளோம். அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்தது நாங்கள்தான். இந்தச் சட்ட வரைவு நிச்சயமாகக் காலாவதியாகாது." என்றார்.
"பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்ட வரைவை அறிமுகம் செய்ததற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை நான் பாராட்டுகிறேன். சட்ட வரை எப்படி அறிமுகம் செய்யப்பட்டதோ, அதே வேகத்துடன் அது சட்டமாக்கப்படவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில், "இந்தச் சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம், அது காலாவதியாகாது" என்றார்.