இந்தியாவின் 35 கோடி நடுத்தர வர்க்கத்தினரின் உணவுத் தேவை அதிகரித்ததே சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியது இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரமே என்று பிரதமரின் சிறப்புத் தூதர் ஷியாம் சரண் கூறியுள்ளார்!
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மாற்றத்திற்கான பிரதமரின் சிறப்புத் தூதர் ஷியாம் சரண், இந்திய நடுத்தர வர்க்கத்தின் வணிகத் திறன் வளர்ச்சிக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமே ஜார்ஜ் புஷ்ஷ¤ம், அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலிசா ரைசும் கூறிய கருத்துக்கள் என்று கூறினார்.
"அவர்களுடைய கருத்துக்களில் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமைக்கும், இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் வளர்ந்துவரும் வணிக சக்திக்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமே அது" என்று ஷியாம் சரண் கூறினார்.
இந்தியாவின் முன்னாள் அயலுறவுச் செயலரான ஷியாம் சரண், உலகளாவிய அளவில் ஏற்பட்டுவரும் வானிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியுள்ள உணவு, எரிசக்தி சிக்கலிற்குத் தீர்வு காண சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமே தவிர, நாடுகளுக்கு இடையே ஒன்றை ஒன்றை குற்றம் சாற்றிக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை என்று கூறினார்.
ஜார்ஜ் புஷ், கோண்டலிசா ரைஸ் ஆகியோர் ஆகியோர் இந்தியாவைப் பற்றி கூறிய கருத்துக்கள் குறித்து கருத்து கூறுமாறு நேற்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அயல்நாட்டின் கெளரவமான பதவியில் உள்ளவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை" என்று பிரதமர் மன்மோகன் சிங் நழுவலாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.