நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட வரைவு கடும் எதிர்ப்பிற்கிடையே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவை அறிமுகம் செய்வதற்காக மத்திய சட்ட அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் எழுந்தபோது குறுக்கிட்ட அபு ஆசிம் ஆஷ்மி உள்ளிட்ட சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்கள், வட இந்தியர்களுக்கு எதிராக மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே கூறிய கருத்துக்களைக் கண்டித்து அவையின் மைப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.
மேலும், பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவின் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்கவும் அவர்கள் முயற்சித்தனர். அமைச்சருக்கு அருகிலிருந்த அமைச்சர்கள் அம்பிகா சோனி, குமாரி ஷெல்ஜா, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், அல்கா பல்ராம் ஆகியோரும் அம்முயற்சியை முறியடித்தனர்.
இருந்தாலும், அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ் சட்ட வரைவை வெற்றிகரமாக குரல் வாக்கெடுப்பின் மூலம் அறிமுகம் செய்தார்.