அவை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுதியளித்ததை அடுத்து 32 எம்.பி.க்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறுவது குறித்துப் பரிசீலிப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.
விலைவாசி உயர்வு விவகாரத்தில், மக்களவையில் ஒழுங்கு தவறி நடந்து கொண்ட பா.ஜ.க., சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் 32 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உரிமைக் குழுவிற்கு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பரிந்துரை செய்தார்.
இதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மக்களவையில் இன்று, எம்.பி.க்களின் மீதான நடவடிக்கையைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மவுனப் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், அவையில் இனி தேவையின்றி அமளியில் ஈடுபட மாட்டோம் என்றும், அவைத் தலைவருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் ஆளுங்கட்சித் தலைவர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் உறுதியளித்தனர்.
இதையடுத்து, "இந்த விடயத்தை நான் மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது நடவடிக்கையை நான் திரும்பப் பெறுகிறேன்" என்று அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
இதனால், நாடாளுமன்றத்தில் கடந்த ஆறு நாட்களாக நீடித்துவந்த சர்ச்சை முடிவிற்கு வந்துள்ளது.