நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வரைவு தொடர்பாக விவாதிப்பதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அவசரமாகக் கூடுகிறது.
புது டெல்லி பந்தயச் சாலையில் உள்ள பிரதமர் வீட்டில் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது என்று தெரிவித்த அரசுப் பேச்சாளர், அக்கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன என்கிற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டுள்ள மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் இந்த வாரத்தில் முடிகிறது. அதற்குள் பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மன்மோகன் சிங், பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தனது அரசு தாக்கல் செய்யும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் தலைமையில் தன்னைச் சந்தித்த இடதுசாரிக் கட்சித் தலைவர்களிடமும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு நிறைவேறுமானால் நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும்.
இந்த இட ஒதுக்கீட்டில் சிறுபான்மை இனப் பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்துவதால் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவு சிக்கலில் சிக்கியது.