விதிகளை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்த மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு பா.ஜ.க., சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புக் காட்டவுள்ளன.
மக்களவையில் விதிமுறை மீறி நடந்துகொண்ட 32 உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலிக்குமாறு உரிமைக் குழுவிற்கு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
இதுகுறித்து விவாதிப்பதற்காக தே.ஜ.கூட்டணிக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்நிலையில், இப்பிரச்சனையை நாளை மக்களவையில் எழுப்ப பா.ஜ.க., சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்றார். இவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது என்று கூறியதற்காக, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது தேவையற்றது என்றார் அவர்.